Rock Fort Times
Online News

துரோகம் செய்தது யார்? நீங்களா நாங்களா?* இபிஎஸ் மீது அமைச்சர் செங்கோட்டையன் கடும் தாக்கு…!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணையும் விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(02-07-2026) நடைபெற்றது. இதில், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தவெகவில் இணைய வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றிய செங்கோட்டையன், “துரோகம் எங்கே நடைபெற்று இருக்கிறது என்பதை நீங்கள் காண வேண்டும். திமுகவோடு இணைந்து முதல்வராகலாம் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறபோதுதான் அங்கு எல்லோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. துரோகம் இங்கே இல்லை. துரோகம் அங்கேதான் இருக்கிறது. அதை அடையாளம் காட்டியவர்கள் இவர்கள். நான் எல்லா தலைவர்களையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். அம்மாவை 21 நாட்கள் சிறைச்சாலையில் அடைத்த சதிகாரர்களோடு கூட்டணி வைப்பதை தகர்த்தெரிய வேண்டுமா வேண்டாமா?. ஏதோ கூட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று மகளிர் அணியை வைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக ஒரு இயக்கமாக இருந்தது. இப்போது அது ஒரு பெருநிறுவனம். அந்த பெரு நிறுவனத்தைவிட்டு இவர்கள் மனித நேயத்தோடு வெளி வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். விஜய் முதல்வராக பதவியேற்று இன்று 54வது நாள். இதன் கூட்டு எண் 9. எண் 9 என்பது  நவக்கிரகங்களைக் குறிக்கும். இங்கே (தவெக) குரு இருக்கிறார். அங்கே (அதிமுக) சனி பிடித்திருக்கிறது. குருவை நம்பி வந்திருக்கிறீர்கள். வெற்றியைக் காணுங்கள்” எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்