அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி: திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது பரபரப்பு புகார்!
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் சிவசங்கர். இவர் மீது காவல் ஆணையரகத்தில் ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன் ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், எனது மகனுக்கு போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அப்போதைய அமைச்சர் சிவசங்கர் ரூ.23 லட்சம் கேட்டார். அவருக்கு நெருக்கமானவர் எனக் கூறி இளஞ்செழியன் என்பவர் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணத்தை செலுத்தினேன். மேலும், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கரையும் சந்திக்க இளஞ்செழியன் ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பின் போது, எனது மகனுக்கு போக்குவரத்து துறையில் வேலை உறுதியாகி விட்டதாகவும், பயப்பட வேண்டாம் வேலை கிடைத்துவிடும் என்று சிவசங்கர் உறுதியளித்தார். நீங்கள் கொடுத்த பணம் தன்னிடம் வந்து விட்டதாக அவர் உறுதிபடுத்தினார். பணத்தை வாங்கிக் கொண்டு வேலை கொடுக்காமல் இளஞ்செழியனும், சிவசங்கரும் ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, முதற்கட்டமாக இளஞ்செழியன் மீது சென்னை அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். ஏற்கனவே போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி சிக்கியுள்ள நிலையில், மற்றொரு முன்னாள் அமைச்சரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.