Rock Fort Times
Online News

த.வெ.க. அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக மாணவர் அணி சார்பில் இன்று(ஜூன் 29) நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு…!

த.வெ.க. அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டி.சரத்குமார், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ குறித்து விளக்கமளித்த அமைச்சர், தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அமைச்சர் டி.சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று(29-06-2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் சென்னை எழும்பூரில் இன்று தி.மு.க. மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்திற்கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறாததால் மேடை அமைக்க அனுமதிக்க முடியாது என கூறினர். பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும் எனவும், போராட்டத்திற்கு மாநகர காவல் ஆணையரிடம் முன்அனுமதி பெற வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். சென்னையைப் போல் மதுரை, புதுக்கோட்டை, திருவள்ளூரிலும் தி.மு.க. மாணவர் அணி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்