Rock Fort Times
Online News

பஸ் வசதியும் இல்லை-நிரந்தர பேராசிரியர்களும் இல்லை…! மணப்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு திமுக அரசு செய்யத் தவறியதை த.வெ.க. அரசு செய்யுமா..?

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மொத்தமுள்ள 340 இடங்களுக்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தகைய பெருமைக்கு திராவிட மாடல் அரசே காரணம் என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திமுகவினரும் பெருமைபட பேசி வருகின்றனர். ஆனால்,இக்கல்லூரியில் செயல்படும் பெரும்பாலான துறைகள், தற்காலிக பேராசிரியர்களை கொண்டே இயங்குவதும், கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் வந்து செல்ல போதுமான பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பதும் பலருக்கும் தெரியாத வலிமிகுந்த கசப்பான உண்மை.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களிடம் நாம் பேசினோம். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது., திருச்சி மாவட்டம், மணப்பாறையை சுற்றியுள்ள பகுதி பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கியதாகும். இங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்குள்ள ஏழை, எளிய மாணவர்கள், பள்ளி படிப்பை முடித்த பிறகு, அரசுக்கல்லூரிகளில் தங்கள் மேற்படிப்பை தொடர விரும்பினால், அவர்கள் இதற்கு முன்பு வரை திருச்சிக்கே செல்ல வேண்டியிருந்தது. அதிலும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், கல்லூரிக்கு சென்ற தங்கள் பெண் வீடு வந்து சேரும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருந்தனர். இதனால், மணப்பாறையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற முந்தைய திமுக அரசு, கடந்த 2022ல் திருச்சி – துவரங்குறிச்சி சாலையில் பண்ணாங்கொம்பிற்கு அருகே, புதிய அரசுக்கல்லூரியை நிறுவியது. இங்கு இளங்கலை தமிழ், ஆங்கிலம், இயற்பியல், பி.காம், பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பகுதி நேரமாக பி.சி.ஏ, பி.காம் ( சி.ஏ ) ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரி தொடங்கப்பட்ட இந்த நான்காண்டுகளில் மொத்தமாக சுமார் 900க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்கள் அரசால் நியமிக்கப்படவில்லை. இதனால் அனைத்து துறைகளிலும் துறைத்தலைவர்களைத்தவிர தற்காலிக பேராசிரியர்களே பணியில் உள்ளனர். இதனால் இக்கல்லூரி மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. இது ஒருபுறமென்றால், பண்ணாங்கொம்பிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கல்லூரி அமைந்திருக்கிறது. இங்கு வந்து செல்ல போதுமான பஸ் வசதியும் இல்லை. இதனால் கல்லூரிக்கு வந்து செல்ல மாணவர்கள் படும் வேதனை சொல்லில் அடங்காது. ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்து மதிய வேளைகளில் பசியோடும், படபடத்த படியும் பேருந்தைப்பிடிக்க ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர்.
எனவே இப்பகுதியை சேர்ந்த நாங்கள் இதுகுறித்து பல முறை அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்தோம்.
ஆனால் இதுவரை இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. மணப்பாறைக்கு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் கொண்டுவந்தோம் என பெருமை பேசும் திமுகவினர், கடந்த கால ஆட்சியில் கல்லூரிக்கு முறையாக பேராசிரியர்கள் நியமிக்கப்படாததையும், மாணவர்கள் வந்து செல்ல பஸ் வசதி செய்யப்படாததையும் கேட்டால் கப்சிப் ஆகி விடுகின்றனர். எனவே தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசாவது இக்கோரிக்கையை நிறைவேற்றி ஆயிரக்கணக்கான மாணவர்களின் துயரை துடைக்க வேண்டும் என மனவலியோடு தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்