முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் முதல் நாள் என்பதால் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றி தொடங்கி வைத்தார்.
அவரின் உரையில் தவெக அரசு திட்டமிட்டுள்ள பல்வேறு செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக முல்லை பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கவும், அணைப் பகுதிகளில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளவும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும் தவெக அரசு நடவடிக்கை எடுக்கும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு ஆணையிட்டதோடு, அணையை வலுப்படுத்திய பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் கேரள அரசானது, அதற்கு மாறாக, புதிய அணையைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கவும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும், அணையின் நீர்மட்டத்தினை உயர்த்தவும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்” என தெரிவித்துள்ளார். மேலும், காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எடுக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டிற்கான நீரை உரிய காலத்தில் பெற்று தரவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது. மேலும், ”நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மழைக் காலங்களில் வரும் நீரை சேமிக்கவும் ஏதுவாக ஏரிகள் மற்றும் குளங்கள் பராமரிப்புத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும். மேலும், கடலுக்குச் செல்கின்ற நீரைத் தடுக்கும் வகையிலும், மழைநீரினைச் சேமிக்கும் வகையிலும், தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்” என ஆளுநர் உரையில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.