திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நவல்பட்டு விஜி. தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புவரை, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக பதவி வகித்தவர். முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், இவருக்கும் ஈகோ யுத்தம் வெடிக்க, திமுகவிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவே அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டார்.
இந்நிலையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் அருள் விஜய்க்கு பதிலாக தன்னை அப்பொறுப்பில் நியமிக்கும்படி கட்சித்தலைமையிடம் இவர் மல்லுக்கு நிற்பதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
இதுகுறித்து திருவெறும்பூர் பகுதி த.வெ.கவினரிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது., “தமிழகத்தில் த.வெ.கவிற்கு கட்சி ரீதீயாக மொத்தம் 120 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டனர். அதன்படி, தற்போது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக கே.அருள்விஜய் செயல்பட்டு வருகிறார். இவர்,விஜயின் அரசியல் கட்சியாக த.வெ.க உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே களப்பணி ஆற்றி வருகிறார்.தொடக்க காலத்திலிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தில் பயணித்த இவரை அங்கீகரிக்கும் விதமாக, தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு கட்சித்தலைமை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வழங்கியது. இவரும் தனது மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சிக்கூட்டங்கள் நடத்துவது என செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நவல்பட்டு விஜி, எலெக்க்ஷன் ரிசல்டுக்கு பிறகு, எப்படியாவது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என ஆவலோடு எதிர்பார்த்தார். ஆனால் இவர்மீதுள்ள நில அபகரிப்பு புகார் விஜியின் அமைச்சர் பதவிக்கு தடையாய் அமைந்தது. எனவே தற்போது அருள் விஜயிடம் இருக்கும் மாவட்ட செயலாளர் பதவியையாவது தனக்கு தருமாறு கட்சித்தலைமையிடம் கேட்டுள்ளார். அதற்கு கட்சித்தலைமை மறுக்க வேறு ஏதாவது நெருக்கமா சோர்ஸ் மூலமாக மாவட்ட செயலாளர் பொறுப்பை வாங்கிவிட பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Comments are closed.