திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்டு கிடந்தது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின்,
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த சோபா மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் பிரசாரத்தில் சட்டத்துக்கு புறம்பாக வாக்குக் கேட்பதற்கான கருவியாக குழந்தைகளைப் பயன்படுத்திய முதல்-அமைச்சர் விஜய், குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார். சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தவெக கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது, ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது, சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை, இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம்- ஒழுங்கு. வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது. இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் திமுக தயங்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை? இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத பயிற்சி காலம் முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்? “அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா? குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி,
பாமகவின் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. பால்மனம் மாறாத குழந்தையை சீரழித்த நான்கு மனித மிருகங்களும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் என்று தெரியவந்துள்ளது. நால்வரும் கஞ்சா போதையில் தான் இந்தக் கொடிய குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர். இதே கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் தான் கடந்த ஆண்டு ஜூலை 12-ம் நாள் நான்காம் வகுப்பு பயிலும் சிறுமியை, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மனித மிருகம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தான். இதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டம் நடத்திய பிறகு தான் குற்றவாளி கைது செய்யப்பட்டான். அந்த வழக்கின் விசாரணை 5 மாதங்களில் முடிக்கப்பட்டு, குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அதே பகுதியில் இன்னொரு கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம், அதனால் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை அரசும், காவல்துறையும் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுவதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Comments are closed.