சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 4.50% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் லிட்டருக்கு ரூ.24 வரை கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டியிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் பாக்கெட் (Green Magic) விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும் தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது. எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களும், நுகர்வோரும் இதுபோன்ற தவறான தகவல்களை நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.