Rock Fort Times
Online News

முதல்வர் விஜய் பிறந்த நாளில் பேனர்கள் வேண்டாம், நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள்- அமைச்சர் ஆனந்த்…!

தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரான பின்னர் வருகிற முதல் பிறந்தநாள் என்பதால் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட த.வெ.க.வினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் தலைமையில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் இன்று( ஜூன் 11) நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது:-

நம் கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் பிறந்தநாள் வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பிறந்தநாளை இதுவரை இல்லாத அளவிற்கு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடுங்கள். முதலமைச்சர் எந்த விதத்திலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் த.வெ.க.வினர் செயல்பட கூடாது என உத்தரவிட்டு உள்ளார். அந்த வகையில் பிறந்தநாளையொட்டி பேனர்கள், கட்-அவுட் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முதலில் சரி என்று சொல்கிறீர்கள். விழாவுக்கு நாங்கள் வரும்போது பேனர்கள் இருந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து நிர்வாகிகளிடம் கேட்டால் தொண்டர்கள் வைத்து விட்டார்கள் என கூறுகிறீர்கள். எனவே இனி த.வெ.க. சார்பில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளிலும் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். முதலமைச்சர் விஜய் உத்தரவுக்கிணங்க பேனர் கலாச்சாரம் என்பது த.வெ.க.வில் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்