திருச்சி, பொன்மலைப்பட்டி புனித ஆக்னஸ் நடுநிலைப்பள்ளியில் மழலையர் வகுப்பிற்கான புதிய கட்டிடம் திறப்பு விழா…* அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் திரளாக பங்கேற்பு!
திருச்சி, பொன்மலைப்பட்டி அருகில் உள்ள புனித ஆக்னஸ் நடுநிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு உதவி பெறும் இப்பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மழலையர் வகுப்பிற்கான புதிய கட்டிடம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. கட்டிடத்தின் உள்ளே வகுப்பறையில் சிறு குழந்தைகளுக்கு புரியும் வகையில் விலங்குகள், பறவைகள், தமிழ் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. இதன்மூலம் சிறு குழந்தைகளுக்கு படங்களை காண்பித்து கல்வி கற்பிப்பது எளிதாக இருக்கும். மாணவர்களும் எளிதாக புரிந்து கொள்வார்கள்.
இந்நிலையில் புதிய மழலையர் பள்ளி கட்டிடத்தை பாளையங்கோட்டை சர்வைட் மரிய நட்சத்திர மாநிலத் தலைவி மரிய ஜாய்சி பேபி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இவ்விழாவில் கொட்டப்பட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தை அருட்பணி ஆரோக்கியசாமி, மூன்று பள்ளிகளின் தாளாளர் அருட் சகோதரி டெய்ஸி, புனித ஆக்னஸ் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி சாந்தா, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஜான்சி , புனித வளனார் மழலையர் ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியை மெர்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இப்பள்ளியில் மழலையர் பள்ளி சேர்க்கை மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளி தனி பெரும் பள்ளியாக பொன்மலைப்பட்டி வட்டாரத்தில் திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.