சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் அலுவலகத்தில் இந்த திருட்டு நடைபெற்று இருக்கலாம் என்று அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், ”ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒப்பந்த தொழிலாளர் தொடர்பான ஆவணங்களும் காணாமல் போய் உள்ளது. இதை திருடியது யார்? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? என்ன மாதிரியான தகவல்களுக்காக இது திருடப்பட்டது என அனைத்தும் விசாரணை செய்து கண்டுபிடிக்கப்படும். மின் துறை தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்டதில் யாரும் தப்ப முடியாது” என்றார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியரான அரக்கோணத்தை சேர்ந்த கோபிநாத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், பணத்திற்காக ஹார்டு
டிஸ்களை திருடி ஒருவரிடம் விற்றதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். யாருக்காக ஹார்டு டிஸ்கை திருடினார், யார் பணம் கொடுத்தது, எவ்வளவு பணம் வாங்கப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையானது துரிதப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு தமிழக டிஜிபியின் பரிந்துரையின் பேரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த வழக்கில் மேலும் பல அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.