சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் நாளை (ஜூன் 9) தொடங்கி வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர், தவெக ஆட்சி அமைத்தது. கடந்த மே 10-ம் தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த விழா மேடையிலேயே முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றுதான் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம். இத்திட்டத்தின் கீழ் பெண்களில் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வண்ணம் சிறப்புக் குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தைத் தலைமை வகித்துச் செயல்படுத்துவதற்காக ஐஜி பவானீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் சிறப்புப் படையினர் ஈடுபடுவார்கள். மேலும், இத்திட்டத்தின் செயல்பாடுகள் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சிறப்புப் படையில் பணிபுரிய இருக்கும் பெண் காவலர்களுக்குப் பிரத்தியேக உடைகள் மற்றும் வாகனம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டு, தயார் செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, கடந்த மே 29ம் தேதி சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், அவர் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டதால், நிகழ்ச்சி தொடக்க விழா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பதவியேற்று 1 மாதம் நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் இத்திட்டத்தைத் தொடங்கவில்லை என பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் நாளை (ஜூன் 9) தொடங்கி வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்ட தொடக்க விழாவுக்கான சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு, காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது. தற்போது காவல்துறை உயர் அதிகாரிகள் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Comments are closed.