சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் விஜய் போட்டியிட்டார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று(01-06-2026) திருச்சிக்கு வருகை தந்த முதல்வர் ஜோசப் விஜய் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி, பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ஆட்சிக்கு வந்த சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று கூறியவர்களால், 6 நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்திலேயே தொடங்கி விட்டார்கள். எம்ஜிஆர் கூட அவரது முதல் தேர்தலில் இந்த அளவிற்கு வாக்கு சதவீதத்தை வாங்கவில்லை என்று சிலர் தெரிவிக்கிறார்கள். எம்ஜிஆருடன் தன்னை ஒப்பிடவில்லை, எம்ஜிஆர், எம்ஜிஆர் தான். பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். இந்த ஒரு மாதத்தில் பெண்களுக்கு, விவசாயிகளுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து இருக்கிறேன். படிப்படியாக நிதி நிலைக்கேற்ப அனைத்தையும் செய்து கொடுப்பேன். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், சாதி மதம் இல்லாத தூய ஆட்சியை அமைத்துள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
தனது பேச்சின் இடையே தான் கோட் சூட் அணிவதாக சிலர் பேசுகிறார்கள். இதில் என்ன தவறு. நான் கோட் சூட் அணியக்கூடாதா? அதிகாரம் செய்பவர்களும், ஆதிக்க சக்திகளும் மட்டும் தான் கோட் சூட் போட வேண்டுமா என கேட்ட அவர், தான் கலர் கலராக கோட் சூட் அணியவில்லை, இரண்டே கலர், நம் எல்லோருடைய மனதும் போலவே கருப்பு, வெள்ளை. எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் ஒயிட்டாக இந்த விஜய் இருப்பான்“ என்று காண்பிக்கவே தான் அந்த கலரை அணிவதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு தொகுதி வேட்பாளர் யார்?,
மேலும் முதல்வர் விஜய் பேசுகையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டுமே எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. திருச்சி கிழக்கு என் செல்லப் பிள்ளை மாதிரி. வரும் இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரையே வேட்பாளராக நிறுத்தப் போகிறோம். விஜய்யை வெற்றிபெற வைத்ததைப்போல, இடைத்தேர்தலில் தான் முன்னிறுத்தும் சாமானியரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கும், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார். ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளர் யார் என்பதை முதல்வர் அறிவிக்கவில்லை.
சஸ்பென்சாக வைத்துள்ளார்.

Comments are closed.