அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று( மே 26) தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் நெல்லையில் இருந்த ஒரு தொகுதியையும் அதிமுக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்திருக்கிறது. இது தொண்டர்கள் மத்தியில் அவர் மீது ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் புதிதாக ஒரு அணி உருவானது. அதிமுகவில் கோஷ்டி பூசல் நிலவி வருவதால் அதிமுகவினர் பலர் மாற்றுக்கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளனர். அதன்படி நேற்று (மே 25) மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிரடியாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். மேலும் 5 எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணையப் போவதாக பேசப்படுகிறது. அவர்களில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக அவர், தலைமை செயலகத்திற்கு சென்று சபாநாயகரை சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சென்னை புறப்பட்டு சென்றிருக்கிறார். அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் அதிமுகவிற்கு செல்வாக்கு இருந்தாலும், இசக்கி சுப்பையாவுக்கென்று தனி செல்வாக்கு இருக்கிறது. இசக்கி சுப்பையா ஜெயலலிதா அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக சில நாட்கள் இருந்தார். பின்னர் அவரை அமைச்சரவையில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். நடந்து முடிந்த தேர்தலில் நெல்லையில் பாளையங்கோட்டையில் திமுகவும், அம்பாசமுத்திரத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றிருந்த நிலையில், மீதமுள்ள 3 தொகுதிகளை தவெக கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் தற்போது இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தால், தன் வசம் இருந்த ஒரு தொகுதியையும் அதிமுக இழக்க நேரிடும்.

Comments are closed.