மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி,திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஜங்ஷன் காதி கிராப்ட் அருகே உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து அமைதி ஊர்வலமாக வந்து ஜங்ஷன் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து எம்பி கிறிஸ்டோபர் திலக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் மிகப்பெரிய பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என தெரிவித்தார். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா என்ற கேள்விக்கு அதுகுறித்து கட்சித் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும். கடந்த முறை அந்தத் தொகுதியில் முதலமைச்சர் போட்டியிட்டதால், இந்த முறை கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து, அந்தச் தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்து முறைப்படி முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.

Comments are closed.