Rock Fort Times
Online News

திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் கட்சியில் இருந்து திடீர் விலகல்…!* மூத்த நிர்வாகிகள் மதிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு..!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் தோல்வியுற்று ஆட்சியை இழந்தது. குறிப்பாக திமுகவின் கோட்டை என கருதப்படும் சென்னை மண்டலத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 இடங்களில் தோல்வியடைந்தது. மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தோல்வியை தழுவியிருப்பது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளருமான கே. செல்வராஜ், அக்கட்சித் தலைமையின் செயல்பாடுகளால் மிகுந்த மனவேதனை அடைந்ததாக கூறி, கண் கலங்கியபடி திமுகவிலிருந்து விலகுவதாக இன்று (21.05.2026) அதிரடியாக அறிவித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே. செல்வராஜ், செய்தியாளர்களைச் சந்தித்து தனது அரசியல் பயணத்தின் இறுதி முடிவை கண்ணீருடன் அறிவித்தார். திருப்பூர் நகரக் கழகச் செயலாளர், திருப்பூர் மாநகர மேயர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளர் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்வராஜ், கடந்த சில ஆண்டுகளாக கட்சிக்குள்ளும், தலைமைக்குள்ளும் ஏற்பட்ட கடுமையான மாற்றங்களே தற்போதைய இந்தத் முடிவுக்குக் காரணம் என்று வேதனையுடன் குறிப்பிட்டார். திமுகவில் பல ஆண்டுகளாகக் ரத்தம் சிந்தி, உண்மையாக உழைத்த தங்களைப் போன்ற மூத்த நிர்வாகிகளுக்கு முறையான மதிப்பும், அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.  அதே சமயம், சமீபத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளும், அளவு கடந்த அதிகாரங்களும் வாரி வழங்கப்படுவதாக அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். கட்சியின் இந்த ஒருதலைப்பட்சமான போக்கினாலும், உழைத்தவர்கள் ஓரங்கட்டப்படுவதாலும் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறிய அவர், இனி சுயமரியாதையை இழந்து கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், திமுகவின் அனைத்து அடிப்படைப் பொறுப்புகளில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகுவதோடு, தீவிர அரசியலில் இருந்தும் முழுமையாக ஒதுங்கப் போவதாக தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்