தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோனேரிகுப்பம் ஊராட்சி காரப்பேட்டை கிராமத்தில் ரூ.16.83 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ள ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் நேற்று (மே.19) காலை 9 மணிக்கு தொடங்கி, மதியம் 3 மணிக்கே நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வெறும் 6 மணி நேரத்திற்குள் டெண்டர் முடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுவாக ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இவ்வளவு குறுகிய நேரத்தில் டெண்டர் நிறைவு செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே டெண்டர் கிடைக்கச் செய்வதற்காக அதிகாரிகள் செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “அவசர தேவைக்கான பணிகளில் இதுபோன்ற குறுகிய கால டெண்டர் நடைமுறைகள் பின்பற்றப்படுவது வழக்கமானது” என விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இ-டெண்டர் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இருந்ததா? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த விவகாரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் என். ஆனந்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் விசாரணை நடத்தினார். அதன் பேரில் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்படி, அதிகாரிகள் சாந்தி மற்றும் கயல்விழி ஆகியோர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டதாக அமைச்சர் என். ஆனந்த் அறிவித்தார்.

Comments are closed.