Rock Fort Times
Online News

அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சை திமுக கண்டிக்காவிட்டால் தக்க பதிலடி- காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்…!

திமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அந்தவகையில் கடந்த 16-ம் தேதி உடன்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ‘சென்னை கொளத்தூர் தொகுதியை ஸ்டாலின் சிங்கப்பூர் போல மாற்றி வைத்திருந்தார்’. ஆனால், அந்த தொகுதி மக்கள் அவரை தோற்கடித்து விட்டனர் என்று சில சர்ச்சையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
மேலும், ‘திமுக வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூரில் போட்டியிட தயாரா?’ என சவால் விடுத்தார். அதோடு, தமிழக வெற்றிக்கழக ஆட்சி இன்னும் 6 மாதத்தில் முடிந்து விடும் என்றும், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார் என்றும், திமுக தயவில் வென்ற காங்கிரஸ் கட்சியினர் துரோகம் செய்துவிட்டு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். துரோகம் செய்த ராகுல்காந்தி முகத்தில் தமிழக மக்கள் கரியை பூசுவார்கள்’ என்றார். அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இந்த பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தோல்வி விரக்தியில்
திமுகவினர் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜய், ஆதவ் அர்ஜூனா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தோற்க வைத்ததாக கொளத்தூர் தொகுதி மக்களை சரமாரியாக வசைபாடினார். தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினரையும் அவர் தரக்குறைவாக விமர்சித்துள்ளார். அமைச்சர் பதவியும், அதிகாரமும் போன பிறகு, விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கான உதாரணம் தான் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு. நாங்கள் உங்களை அதிகாரத்திற்கு கொண்டு வர உழைத்தவர்கள் தான். எங்களுக்கும் திருப்பி பேச தெரியும். அரசியலிலும், பதிலடி கொடுக்க தெரியும். ஆனால், அரசியல் நாகரீகத்தை மதித்து திமுக தலைமையின் பதிலுக்காக காத்திருக்கிறோம். திமுக தலைமையிடம் ஒரு கேள்வி. இந்த மொழியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும். இல்லை என்றால், இதே அரசியல் மொழியில் உங்களுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயங்க மாட்டோம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்