திருச்சியில் உள்ள மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் அருகிலேயே உள்ளது. இந்த தெப்பக்குளத்தை சுற்றி நான்கு புறங்களிலும் ஏராளமான தரைக் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தரைக் கடைகளால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், கடைவீதிக்கு வரும் பொது மக்களுக்கும் பெரும் இடைஞ்சலாக இருந்தது. திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தும் கடைகளை காலி செய்ய முன்வரவில்லை. இதனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தெப்பக்குளத்தை சுற்றிலும் இருந்த தரைக்கடைகள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் வந்து செல்ல விசாலமான சாலை வசதி கிடைத்தது.
இந்தநிலையில் தெப்பக்குளத்தை தூர் வாரும் பணி இன்று( மே 15) மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் தொடங்கியது. முன்னதாக பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில இணைச்செயலாளர் தீபக் ராஜா, திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், மாநகர செயலாளர் வி.பி. ஆறுமுகப்பெருமாள், மங்கள் அண்ட் மங்கள் உரிமையாளர் மூக்கப்பிள்ளை, ஆனந்தா கார்ப்பரேஷன் ரமேஷ், மலைக்கோட்டை கோவில்அறங்காவலர் குழுத் தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வணிகர் சங்க பேரமைப்பின் பங்களிப்புடன், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியது. குளத்தை முழுமையாக தூர் வாரியவுடன் புது தண்ணீர் நிரப்பப்பட்டு, மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்படும் என தெரிகிறது. மேலும், நடைபாதைகள் மேம்படுத்தப்பட்டு, மாலை நேர நடைபயிற்சி மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் உருவாக்கப்பட உள்ளன. எதிர்காலத்தில் படகு சவாரி ஏற்படுத்துவது குறித்து அரசுடன் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Comments are closed.