திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் பக்தர்கள் அமர்ந்திருந்த இடத்தில் தண்ணீரை ஊற்றி விரட்டியடித்த ஊழியர்கள்…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் சுவாமி கோவிலை போல திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நமது துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆகவே, இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். அந்தவகையில் இன்றும்(மே 15) கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாற கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது கோவிலில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் இங்கு அமரக்கூடாது, கோவிலில் இருந்து வெளியேறுங்கள் என அதிகார தோரணையில் பேசி உள்ளனர்.
அதற்கு பக்தர்கள், வெயில் கொடுமை அதிகமாக இருக்கிறது சற்று நேரம் அமர்ந்து விட்டு சென்று விடுகிறோம் என்று கூறியுள்ளனர். அதனைக் கேட்காத ஊழியர்கள் அதெல்லாம் முடியாது உடனே வெளியேறுங்கள் என்று அதட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஊழியர்கள் பக்தர்கள் அமர்ந்திருந்த இடத்தில் தண்ணீரை ஊற்றி அராஜகப் போக்கில்
ஈடுபட்டுள்ளனர். இதனால், வேதனை அடைந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமரக்கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் யார்?, கோவிலுக்கு வருவது அமைதிக்கு தானே? என்று கூறியதோடு பக்தர்களை தண்ணீரை ஊற்றி விரட்டி அடித்த ஊழியர்கள் மீது கோவில் நிர்வாகத்தினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Comments are closed.