திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் திருச்சி ராமகிருஷ்ணன் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர். சிலர் கல்லூரி விடுதியிலும் தங்கி பயின்று வருகின்றனர். அந்தவகையில் இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவி கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். அந்த மாணவி இன்று(15-05-2026) பரீட்சை ஹாலில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவர்
தேர்வு கண்காணிப்பாளரிடம் தனக்கு வயிறு வலிப்பதாகவும், கழிவறை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அவர் அனுமதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து கழிவறைக்கு சென்ற அந்த மாணவி அங்கு ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
கழிவறைக்கு சென்ற மாணவி நீண்ட நேரம் திரும்பி வராததால் அங்கு சென்ற கல்லூரி நிர்வாகத்தினர்,
மாணவி குழந்தை பெற்றெடுத்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த மாணவியையும், குழந்தையையும் அருகிலுள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து. திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த மாணவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் எப்படி குழந்தை பெற்றார் என்பது தெரியவில்லை. அவர் யாரையாவது காதலித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. இதுகுறித்து சமயபுரம் போலீசார் கல்லூரி நிர்வாகத்தினரிடம் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி கழிவறையில் மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Comments are closed.