Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அரசிதழில் பழைய சபாநாயகர் பெயர் இடம் பெற்றது எப்படி?- அரசு விளக்கம்…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிட்டார். இதில், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ந்தேதி முதல், திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு அரசின் அரசிதழில் இன்று(மே 14) வெளியானது. ஆனால், அந்த அரசிதழில் சபாநாயகர் அப்பாவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு, 17-வது சட்டசபையின் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் கடந்த 12-ந்தேதி பதவியேற்றார். இந்நிலையில், இன்று வெளியாகி இருக்கும் அரசிதழில் சபாநாயகரின் பெயர் அப்பாவு என்று குறிப்பிடப்பட்டதால், கவனக்குறைவாக இந்த பிழை நிகழ்ந்துவிட்டதா? அல்லது முதல்வர் விஜய்க்கு கெட்ட பெயர் உண்டாக்கும் எண்ணத்தில் செயல்பட்டனரா? என பலர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பதவி ஏற்பதற்கு முன்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான அறிவிப்புதான் இன்று அரசிதழில் வெளியாகியுள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் புதிய சபாநாயகர் பதவி ஏற்காததால், முன்னாள் சபாநாயகரான அப்பாவுவின் பெயர் அதில் இடம்பெற்றுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் இருந்தாலும் அரசிதழில் ஒரு அறிவிப்பினை வெளியிடும்போது போது முறையாக சரி பார்க்க வேண்டாமா? என்பது
பலரது கேள்வியாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்