ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்… ரெங்கா…ரெங்கா… கோஷம் விண்ணதிர வடம் பிடித்த பக்தர்கள்!
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு தமிழகத்திலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து நம்பெருமாளை தரிசனம் செய்வர். இக்கோவிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, கடந்த மே 6-ம்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது நம்பெருமாள் கருட வாகனம், யாளி வாகனம், யானை வாகனம், தங்ககுதிரை வாகனம், பூந்தேர், கற்பகவிருட்ச வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம்
இன்று(14-05-2026) காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள் அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அளித்த வஸ்திரங்களை சாற்றியபடி புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெரியதிருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், காலை 6 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். தேரானது, நான்கு சித்திரை வீதிகளில் அசைந்தாடியபடி செல்கிறது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை என பல மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.