17-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் இன்று(11-05-2026) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாட்டில் 233 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இன்று பதவியேற்றனர். முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் மற்றவர்கள் இன்று பதவியேற்றனர். எம்எல்ஏக்கள் பதவியேற்று முடிந்ததும் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்று அவரை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்று கூறப்பட்டது. அதன்படி, முதல்வர் விஜய் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்றார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கட்டி அணைத்து வரவேற்றனர். அவர்களது குடும்பத்தினரும் முதல்வர் விஜயை வரவேற்றனர். பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு, விஜய் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார்.
வைகோ,
அதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றார். அப்போது வாசலில் நின்ற மதிமுக எம்பியான துரை வைகோ, முதலமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்றார். முதலமைச்சர் விஜய்க்கு பட்டு சால்வை மற்றும் மலர் மாலை அணிவித்து அழைத்துச் சென்றார். பின்னர் பெருமகிழ்ச்சியுடன் வைகோவும், முதலமைச்சர் விஜய்யும் ஒன்றாக வெளியே வந்து அங்கு திரண்டிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து கைகளை அசைத்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். முதலமைச்சர் விஜய்யை அழைத்து வந்து காரில் ஏற்றி வைகோ அனுப்பி வைத்தார். முதல்வர் விஜய், மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெறுவது அரசியலில் நல்ல பண்பாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.