பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல…* அரசியல் கட்சித் தலைவர்கள் காட்டம்..!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி அமைக்க போதுமானதாக இல்லை. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. தற்போதைய நிலவரப்படி, 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழக வெற்றி கழகத்தின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. மீதி உள்ள இடங்களுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழக ஆளுநர் பொறுப்பு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து விஜய் கடிதம் கொடுத்தார். பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் சென்னை நேரு உள்
விளையாட்டு அரங்கில் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால், முதலமைச்சராக விஜய் பதவி ஏற்க ஆளுநர் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. பெரும்பாலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றவர் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு சட்டமன்றத்தில் தான் பெரும்பான்மையை நிரூபிப்பார். ஆனால், ஆளுநர் விஜயை இன்னும்
பதவி ஏற்க அழைக்காதது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
திருமாவளவன்:
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தனிப்பெரும் கட்சியாக த.வெ.க.வை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். எனவே விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையதல்ல. விஜய்க்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். எங்களுடன் இணைந்து த.வெ.க. ஆட்சியமைக்க விரும்புவதை நாங்கள் பரிசீலிக்கிறோம் என்றார்.
இந்திய கம்யூ. கட்சி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக தலைவர் சி.ஜோசப் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியுள்ளார். பதவி ஏற்புக்கு முன்பு தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல. தனிப்பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.