‘அக்னி நட்சத்திரம்’ மே 4-ம் தேதி தொடங்குகிறது… * பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுகோள்..!
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலை உச்சபட்சமாக 116.8 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி உள்ளது. இது போதாதென்று கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு மே 4ம் தேதி துவங்க உள்ளது. மே 28ம் தேதி வரை நீடிக்கும் இந்த காலத்தில் தான் வெயிலின் உக்கிரம் தாண்டவமாடும். இந்த ஆண்டு மத்திய மண்டலமான நாக்பூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் 47 – 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல
தமிழகத்தின் பல இடங்களில் வெப்பநிலை சதம் கடந்தது. குறிப்பாக வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. அக்னி நட்சத்திர நாட்களில் நாடு முழுவதும் வெப்ப அலை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் நடக்கும் 24 நாட்களும் தமிழக மக்கள் நித்திய கண்டம் போலவே ஒவ்வொரு நாளையும் கடந்து செல்ல வேண்டும். ஏற்கனவே 100 டிகிரிக்கும் மேல் பல இடங்களில் வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி காலத்தில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெப்ப அலைகளும் 6 முறை ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்த கடுமையான வெப்ப காலத்தில் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அவசியம் இல்லாமல் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் மே நாளில் தான் ஐந்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.