நாளை (மே 1) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து 2 நாட்கள் சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக இன்று (ஏப்.30) காலை முதலே அதிகப்படியான
பக்தர்கள் புறப்பட்டதால், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல, சொந்த வாகனங்களில் செல்பவர்களும் திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்றதால், பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டனர். நாளை தொழிலாளர் தினம், அடுத்து சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாகவும், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டும் பொதுமக்கள் குலதெய்வ கோயில்களுக்கு செல்ல உள்ளதாலும் தமிழக அரசு சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, இன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு
475 சிறப்பு பேருந்துகளும், நாளை 315 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 85 பேருந்துகளும், நாளை மற்றும் நாளை மறுதினம் தலா 75 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மாதவரத்திலிருந்து பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Comments are closed.