Rock Fort Times
Online News

‘ஹர ஹர சங்கர… சிவ சிவ சங்கர..’* பக்தி கோஷம் விண்ணதிர மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்…!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் விமரிசையாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, 11ம் நாள் நிகழ்வான இன்று(29-04-2026) திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு, கோயிலுக்குள் அமைந்துள்ள ம.முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி மற்றும் ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளினர். பிறகு காலை 5.05 மணிக்கு கீழமாசிவீதியில் அமைந்துள்ள தேரடிக்கு அம்மனும், சுந்தரேஸ்வரர் சுவாமியும் வருகை தந்த பிறகு, தேரடி கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. அதன்பின்னர், காலை 6.30 மணிக்கு சுந்தரேஸ்வரர் சுவாமி மற்றும் அம்மன் தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ‘ஹர ஹர சங்கர… சிவ சிவ சங்கர..’ பக்தி கோஷம் விண்ணதிர இரண்டு தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்த நிலையில், நான்கு மாசி வீதிகளையும் கடந்து சென்று வருகிறது. தேரின் முன்பாக கலைஞர்கள் பலர் ஒயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலைகளை நிகழ்த்திய வண்ணம் சென்றனர். இந்த ஆண்டு சித்திரை திருவிழா தேர் நிகழ்வில், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த தேர் சக்கரங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சக்கரங்கள் திருச்சி பாரத மிகுமின் நிலையம் (பெல்) சார்பில் செய்யப்பட்டு, தேரில் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு தேர்களின் சக்கரங்களுக்கும் சுமார் ரூ.35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, இன்று மாலை 7 மணி அளவில் சப்தாவர்ண சப்பரத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதனிடையே சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இன்று மாலை அழகர்மலையில் இருந்து கள்ளழகர் புறப்படுகிறார். அதனைத்தொடர்ந்து நாளை காலை மதுரை மூன்று மாவடி அருகே பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்