Rock Fort Times
Online News

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!

தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 21-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பாளும், தாயுமானவர்(சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர்.

 

தொடர்ந்து கடந்த 25ம் தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், 26ம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று(29-04-2026) காலை 6.30 தொடங்கியது. மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக சண்டிகேஸ்வரர் பரிவார மூர்த்திகள் சிறிய தேரில் சென்றன. தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய…என்ற பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேர் முக்கிய விதிகளின் வழியாக அசைந்தாடியபடி சென்றது. தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் நலன் கருதி ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,

தேரோட்டத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிழக்கு மாநகரச் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் இனிகோ இருதயராஜ், பகுதி கழக செயலாளர் மோகன், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி மற்றும் மலைக்கோட்டை தாயுமானவர் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கருணாநிதி, ஸ்ரீதர், கோவிந்தராஜ், கலைசெல்வி மற்றும் பலர் பங்கேற்று பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்