உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. அதைதொடர்ந்து மீனாட்சி அம்மன், போரில் தேவர்களை வென்று இறுதியில் சிவபெருமானுடன் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது வில், அம்புடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் காட்சி தந்தனர். இதில், மீனாட்சி அம்மனாக சிவாதித்யன், சுந்தரேசுவரராக சட்டநாக ராஜசேகரன் ஆகியோர் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் கூட்டம் அலைமோதியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று( ஏப்.28) காலை கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக மதுரை விழாக்கோலம் பூண்டது.

மாப்பிள்ளை அழைப்பு நேற்று கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டினர் சார்பில் வழங்கப்பட்டன. கோவிலுக்குள் வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும்போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக சென்று ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர். அங்கு ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருகின்றனர்.

திருக்கல்யாணத்தில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்று புது தாலி அணிந்து அம்மனை வழிபட்டனர்.

Comments are closed.