Rock Fort Times
Online News

தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் குவிந்தனர்..!

உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று ‘தஞ்சை பெரிய கோயில்’ என்றழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோயில். கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் இக்கோயில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இவ்விழா கடந்த ஏப்ரல் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(ஏப்.27) வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை பெரிய கோயிலிலிருந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீநீலோத்பலாம்பாள், ஸ்ரீதியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீகமலாம்பாள் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் அமர்ந்திருக்க, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று மேலவீதி தேரடியை வந்தடைந்தது. பின்னர் ஸ்ரீதியாகராஜ சுவாமி, கமலாம்பாள் சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருள, அவர்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு மங்கள இசைக்கருவிகள் முழங்க தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. தேரினை, தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் பாதிரியார்கள், உலமாக்கள், இஸ்லாமிய பெண்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு எலுமிச்சை ஜூஸ், தண்ணீர், நீர் மோர் ஆகியவற்றை வழங்கினர். தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்