Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது; தொகுதிகளில் இருந்து வெளி ஆட்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு..!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (23.04.2026) நடக்கிறது. இன்று( ஏப்.21) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனம் பகுதியிலும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியிலும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த்தால் தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டம், சாலை வலம் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 126-இன் கீழ் ஏப்ரல் 21 மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை (ஏப்ரல் 23) திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்-ஆப், முகநூல், எக்ஸ் போன்ற எவ்வித மின்னணு சாதனங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். அதே போன்று அந்தந்த தொகுதிகளில் வாக்காளர்கள் அல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இதனை உறுதி செய்ய கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் மாநிலம் முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பணிமனைகளை வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே மட்டுமே அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பணிமனையில் 2 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், தேவையற்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்