Rock Fort Times
Online News

திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேர்திருவிழா… *கொடியேற்றத்துடன் தொடங்கியது !

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி, மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவசுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டால் சுகபிரசவம் கிட்டும் என்பது ஐதீகம். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, சித்திரை தேர்திருவிழா இன்று( ஏப்.21) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக தாயுமானவர் சன்னதியில் உள்ள தங்ககொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மேளதாளங்கள் முழங்கிட ரிஷப கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து இன்றுமுதல் கற்பகவிருட்ச வாகனம், பூதவாகனம், வெள்ளி ரிஷபம், யானை, தங்க குதிரை ஆகிய வாகனங்களில் நாள்தோறும் தாயுமானவர், மட்டுவார்குழலம்மை சமேதராக வலம் வருகிறார். 25ம் தேதி இரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் எழுந்தருளி மருத்துவம் செய்த செட்டிப்பெண் பிரசவ வைபவமும், 26ம்தேதி திருக்கல்யாண வைபவமும், தொடர்ந்து வருகிற 29ம்தேதி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 30ம்தேதி பஞ்சமூர்த்திக்கு பிராயசித்த அபிஷேகம், இரவு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்