Rock Fort Times
Online News

கரூரில் திமுக- அதிமுக பயங்கர மோதல்; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரை தாக்க முயற்சி…! ( வீடியோ இணைப்பு)

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் கரூர் தொகுதி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இங்குதான் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும்( திமுக), எம்.ஆர்.விஜய பாஸ்கரும்( அதிமுக) கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல இரண்டு பேரின் தேர்தல் பிரச்சாரத்திலும் அனல் பறந்தது. அந்தத் தேர்தலில் செந்தில்பாலாஜி வெற்றி வாகை சூடினார். அது மட்டுமின்றி கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க செந்தில் பாலாஜியே காரண கர்த்தாவாக இருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறையும் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜிக்கும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையே போட்டி கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதிக்கு இடம் மாறினார். கரூர் தொகுதியில் இந்த முறையும் அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜய பாஸ்கரும், திமுக சார்பில் ஆசி.தியாகராஜனும் களம் காண்கின்றனர். ஆரம்பம் முதலே அவர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டம், வெண்ணைமலை உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கோயில் இனாம் இடப்பிரச்சனை சம்பந்தமாக அதிமுக சார்பில் நோட்டீஸ் அச்சிடப்பட்டு அதனை அதிமுகவினர் இன்று( ஏப்.20) தான்தோன்றிமலை பகுதி பொதுமக்களிடம் விநியோகித்து கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், நோட்டீஸ் வழங்கியதை தடுத்ததால் அங்கு இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரையும் திமுகவினர் சுற்றி வளைத்து தாக்க முற்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நோட்டீஸ் விநியோகம் செய்த பெண்களை தாக்கிய திமுகவினரை கைது செய்யக்கோரி அதிமுகவினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் அதிமுக பெண் நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி இதுகுறித்து புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளித்தார். கரூரில், அதிமுக வேட்பாளரை திமுகவினர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்