Rock Fort Times
Online News

எங்களின் எதிர்ப்பை மீறி தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்…* முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும். நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்ட முன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்தச் சட்ட முன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்ட முன்வடிவு இருக்கிறது. அவசர கதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. மத்திய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். முன்னாள் பிரதமர் மறைந்த நேரு இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார். அவர், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார். ஆனால், தற்போதைய மத்திய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். நாம் கோருவது, தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பா.ஜ.க. அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்