ஒரு குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான யுனிவர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ்; 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…* தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்!
வருகிற 23-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் களை கட்டியுள்ளன. அனைத்துக் கட்சிகளும், தங்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிக்கைகளை ஏற்கனவே வெளியிட்ட நிலையில், முதன்முறையாக தேர்தல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை மட்டும் வெளியாகாமல் இருந்தது. இத்தகைய சூழலில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், இன்று( ஏப்.16) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
- 60 வயதிற்குட்பட்ட குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மாதம் ரூ. 2,500 செலுத்தப்படும்.
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
- ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ஒரு தரமான பட்டுப்புடவை வழங்கப்படும்.
- பெண்களால் நடத்தப்படும் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
- ஒவ்வொரு தமிழ் மாணவரின் கல்வி கனவுக்கும் ஆதரவளிக்கும் வகையில், இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.
- போதைப்பொருள் இல்லா தமிழகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மன்றங்கள் அமைக்கப்படும்.
- ஒரு குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வரையிலான யுனிவர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ் (புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை, இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சைகளை உள்ளடக்கியது)
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரமும், 12ம் வகுப்பு, ஐடிஐ டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 2,500 கொடுக்கப்படும்.
- முதல்வர் மக்கள் சேவை நண்பன்’ திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டு வாசலிலேயே அரசு திட்டங்களை பெறுவதை உறுதி செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்படும் அனைத்து பயிர்க் கடன்களும் முழு தள்ளுபடி; 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்படும் அனைத்து பயிர்க் கடன்களில் 50% தள்ளுபடி செய்யப்படும்.
- நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500 குறைந்தபட்ச ஆதரவு விலை; கரும்பு டன்னுக்கு ரூ. 4,500, தென்னை விவசாயிகளுக்கு கொப்பரை தேங்காய் விலை நிலைப்படுத்தப்படும். மேற்கண்டவை உட்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளன.

Comments are closed.