தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள், இதர அதிகாரிகளை மாற்ற இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத் தலைமைச் செயலர் நா.முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோரை தேர்தல் ஆணையம் நேற்று திடீரென மாற்றி உத்தரவிட்டது. புதிய தலைமைச் செயலராக எம்.சாய்குமார், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழக பிரிவில் 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் அதி காரியான டாக்டர் எம்.சாய்குமார், பொதுப் பணித்துறை செயலர், மின் வாரியத் தலைவர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர், செய்தித்தாள் காகித நிறுவனத் தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக பழனிசாமி இருந்த போது, முதல்வரின் செயலர்களில் முதன்மையானவராக சாய்குமார் இருந்தார்.
சந்தீப் மிட்டல்:
கடந்த 1995-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் மிட்டல், சைபர் பாதுகாப்பு, குற்றவியல் புலனாய்வில் நிபுணத்துவம் பெற்றவர். தமிழகத்தில் சைபர் குற்றத் தடுப்பு, டிஜிட்டல் விசாரணை, சைபர் ஆளுமை கட்டமைப்புகளை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.