திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிங்கத்தமிழர் முன்னேற்றக் கழக மாநில தலைவர் ஆர்.வி.பரதன் போட்டியிடுகிறார். அவர் இன்று (04-04-2026) தேர்தல் நடத்தும் அலுவலர் சிவாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, பாஜக புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.வி. பரதன்,
தமக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சியினர் பண பலம் மற்றும் தவறான முறைகளை பயன்படுத்தி தேர்தலை சந்திக்கின்றனர். கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி வாக்காளர் விவரங்களை சேகரிக்கின்றனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளோம். நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். இது விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் . மண்ணச்சநல்லூர் தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த முக்கிய நலத்திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
தற்போதைய எதிர்க்கட்சியினர் சுயநல நோக்கில் செயல்படுகின்றனர். தாம் வெற்றி பெற்றால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவேன். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

Comments are closed.