Rock Fort Times
Online News

எம்.எல்.ஏ. கனவில் பணத்தை வாரி இறைத்த மூவர் கடைசியில் காங்கிரசுக்கு கை மாறிய தொகுதி…* உஷ்ணத்தில் உசிலம்பட்டி திமுக!

மதுரை மாவட்டத்திற்குட்பட்ட முக்கியமான தொகுதிகளில் ஒன்று உசிலம்பட்டி. 1957ல் இருந்து இது ஃபார்வர்டு பிளாக் தொகுதியாகவே அறியப்படுகிறது. காரணம் 1957லிருந்து 1977 வரையிலான தேர்தல்களில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இங்கு போட்டியிட்டாலும் பார்வர்டு பிளாக் வேட்பாளரான பி.கே.மூக்கையா தேவரே தொடர்ந்து வென்றிருக்கிறார். அதன்பிறகு 1989ல் நடைபெற்ற தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்தது. இதில் அக்கட்சி வேட்பாளரான வல்லரசு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களிலும் அதிமுக மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவையே வெற்றியில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. ஆனால், இதுவரை உசிலம்பட்டி தொகுதியில் திமுக தனியாக நின்று வெற்றி பெற்றதில்லை. எனவே, நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலிலாவது திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட 3 ஒன்றியங்களை 8ஆக பிரித்து வேலை பார்த்தனர். இதன் பயனாக நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேனியில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வனுக்கு 70 ஆயிரம் ஓட்டுகள் உசிலம்பட்டியில் மட்டும் கூடுதலாக கிடைத்தது. மேலும், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினும் உசிலம்பட்டியில் தனி கவனம் செலுத்தும் விதமாக இத்தொகுதியின் ஆளுமைகளில் ஒருவரான பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். எனவே, தலைமையின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப உசிலம்பட்டியின் நகரச் செயலாளரான எஸ்.ஓ.ஆர். தங்க பாண்டியன், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த எம்.பி.கனிமொழியின் ஆதரவாளரான இளமகிழன், உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜி.அஜித் பாண்டி ஆகியோர் சகட்டுமேனிக்கு கரன்சி கட்டுகளை வாரி இறைத்து செலவு செய்தனர். தொகுதிக்குள் நடக்கும் கல்யாணம், காதுகுத்து, தேர், திருவிழா ஆகியவற்றில் தாராளம் காட்டினர். இதில் முதல் இருவரையும் முந்தும் விதமாக திமுக ஒன்றிய செயலாளரான அஜித் பாண்டி பல லட்சங்களை செலவழித்து கடந்தாண்டு உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை அமைச்சர் மூர்த்தியின் தலைமையில் மினி மாநாடு போல நடத்தி அவரின் கீர்த்தியை பெறலாம் என நினைத்தார். இதனிடையே சமீபத்தில் திமுகவிற்கு தாவிய ஓ.பி.எஸ்.
ஆதரவாளரான தற்போதைய எம்.எல்.ஏ ஐயப்பனும் சீட் பெற முயற்சித்தார். ஆனால், கட்சித் தலைமையோ எல்லோருக்கும் போக்கு காட்டி இத்தொகுதியை தற்போது காங்கிரஸூக்கு ஒதுக்கி உள்ளது. இதனால் இந்தமுறை எப்படியாவது உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வாகி சட்டை காலரை உயர்த்தலாம் என்கிற திமுக பிரமுகர்களான மூவரின் கனவும் தற்போது கானல் நீராக மாறியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்