தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. தனது கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அறிவித்துள்ள விஜய், நேற்று சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, வழியெங்கும் நின்றிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விஜய்க்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கொளத்தூரில் விஜய் பிரசாரம் செய்தார். விஜய்யை பார்ப்பதற்கும், அவரது பேச்சை கேட்கவும் ஆண்களும், பெண்களும் என பெருங்கூட்டம் நின்றது. சிலர் சாலை தடுப்புகளை தாண்டி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய் பிரசார வாகனம் மக்கள் கூட்டத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிறுத்தப்பட்டது. இளைஞர்களின் எழுச்சிக்கு மத்தியில் விஜய் தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார். இதனைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை மறுநாள்( ஏப்ரல் 2) விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் பரப்புரையின்போது தேர்தல் விதிகளை மீறியதாக த.வெ.க. தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 5 ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரிகளிடம் அளித்த உறுதிமொழியை மீறி 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பொதுமக்களை திரட்டியதாகவும், பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் பாதையை மறைத்ததாகவும் தேர்தல்நிலை கண்காணிப்பு குழு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.