Rock Fort Times
Online News

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டது ஏன்?… மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் சண்முகம் பேட்டி!

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு தொகுதி குறைத்து வழங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கடந்த 2021 தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்த தங்களுக்கு, இந்த எண்ணிக்கை மனநிறைவைத் தரவில்லை என்றாலும், அரசியல் சூழல் கருதி இதனை ஏற்றுக் கொண்டுள்ளோம். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம், இந்த முறை அதை விட அதிகமான இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுக தலைமையிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இரண்டு முறை நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. இருப்பினும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருப்பதை சுட்டிக்காட்டி இடங்களைப் பகிர்ந்து அளிப்பதில் உள்ள நெருக்கடியைத் திமுக தரப்பு விளக்கியது. தாங்கள் எடுக்கும் எந்தவொரு முடிவும் பாஜக – அதிமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். கூட்டணியின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்ற அக்கறையுடனும், மதவெறி சக்திகளை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடனும் இந்த 5 தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளோம். எண்ணிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றாலும், கொள்கை ரீதியான வெற்றிக்காகத் தங்கள் கட்சி இந்தப் பெருந்தன்மையான முடிவை எடுத்துள்ளோம். இந்தத் தேர்தலானது மதவெறி சக்திகளுக்கும், மதச்சார்பற்ற அணிகளுக்கும் இடையிலான நேரடி போர். திமுக தலைமையிலான கூட்டணி வருகிற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்