150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சுற்றுலா பயணியை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ராணுவ பெண் மருத்துவருக்கு குவியும் பாராட்டு…!
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் ஊசிமலை காட்சிமுனை சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்ற செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சிவகுருநாதன், காட்சிமுனையில் மார்ச் 19 அன்று செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து சிவகுருநாதன், தனது கார் ஓட்டுநருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அந்த கார் ஓட்டுநர் உடனடியாக காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரமாக சிவகுருநாதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து வனத்துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும், இரவு நேரம் என்பதாலும் யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணியில் வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நீலகிரி வெலிங்டன் ராணுவ அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த ராணுவ வீரர்கள், காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள் கூட்டாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதன்விளைவாக, சுமார் 13 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு மறுநாள் அதிகாலை 3 மணியளவில் சிவகுருநாதனை பத்திரமாக மீட்டனர். குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் செண்டரைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் சந்தன் மேத்தா தலைமையிலான குழுவினர், இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றி வரும் மேஜர் கவிதா வாசுபள்ளியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தைரியமாக 150 அடி பள்ளத்தில் இறங்கிக் காயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். ஆபத்தை துச்சமாக நினைத்து இளைஞரின் உயிரை காப்பாற்றிய மேஜர் கவிதா வாசுபள்ளிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Comments are closed.