Rock Fort Times
Online News

தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே கரூரில் ஆரம்பித்தது அக்கப்போர்…!* எம்.ஆர். விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் மாறி மாறி புகார்!

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், கரூர் தொகுதி மட்டும் அதிக கவனம் பெற்றதாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம், திமுகவின் மாவட்ட செயலாளராக உள்ள செந்தில் பாலாஜியும், அதிமுகவின் மாவட்ட செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் நேருக்குநேர் அரசியல் களத்தில் களப்பணி ஆற்றுவதே. கடந்த முறை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. இந்த முறையும் நான்கு தொகுதிகளையும் கைப்பற்ற செந்தில் பாலாஜியும், வெற்றியை தனதாக்க எம்.ஆர்.விஜய பாஸ்கரும் களத்தில் இறங்கி விட்டனர். இவர்கள் இருவரும் தான் கரூரில் மீண்டும் மோதப் போகிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்பதால் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ரவிக்குமாரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஏற்பாட்டில், கரூர் தொகுதியில் ஆடு, மாடுகளை அடைப்பது போன்று 100 இடங்களில் தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. முறையான அனுமதியில்லாமல் அதை அமைத்து வருகின்றனர். 48 இடங்களில் போடப்பட்டுள்ள பட்டிகளின் புகைப்பட ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளோம். தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதிலிருந்து, அதில் வாக்காளர்களை அடைத்து வைத்து தினந்தோறும் அறுசுவை உணவு வழங்கி, நாளொன்றுக்கு ரூ.500 வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் வருகை தந்துள்ள தேர்தல் பார்வையாளர்களையும் சந்தித்து மனு அளிக்கவுள்ளோம் என்றார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே கரூர் திமுகவின் நகர செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தோல்வி பயத்தால், திமுகவின் மீது பொய்யான புகாரை தேர்தல் ஆணையத்தில் அளித்திருப்பதாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாரளித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், கடந்த 5 ஆண்டுகளாக, பொறுப்பிலிருந்த செந்தில் பாலாஜி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து, கரூர் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளார். இதனால் தான் அதிமுகவினர் தேர்தலை சந்திக்க அஞ்சுகின்றனர். தோல்வி பயத்தால், பொய்யான புகார்களை வழங்கி வருகின்றனர். கரூர் தொகுதியில் மட்டும் 9 தேர்தல் பணிமனைகளை அனுமதி பெற்று நிறுவியுள்ளோம். மற்றவை திமுக சார்பில் அமைக்கப்பட்டது அல்ல” என்றார். இதன்மூலம் கரூர் சட்டமன்ற தொகுதியில் இப்போதே தேர்தல் அக்கப்போர் தொடங்கி விட்டது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்