ஒருமித்த கருத்துக்கள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவேன்…* புதிய கட்சி தொடங்கியுள்ள சசிகலா பேட்டி !
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, புதிய கட்சியைத் தொடங்குவதாக ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் பிப். 24-ம் தேதி அறிவித்த நிலையில், அன்றைய தினம் கட்சியின் கொடியை மட்டும் அறிமுகப்படுத்தினார். இன்று( மார்ச் 13) கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ‘அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் என்று தெரிவித்தார். மேலும், கட்சியின் சின்னத்தையும் அவர் அறிவித்துள்ளார். தென்னந்தோப்பு
தான், அஇபுதமமுக கட்சியின் சின்னம். இதன்மூலம் நான் தனி மரமாக வரவில்லை, தோப்பாகத்தான் வந்துள்ளேன். நான் என்றைக்குமே மக்களுடன்தான் இருப்பேன் என்பதற்கே இந்த சின்னம் சாட்சி. ஒருமித்த கருத்துக்கள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவேன். எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா? இல்லையா? என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரிந்துவிடும் என்று சசிகலா கூறினார். அவரது கட்சியின் பெயரில் ஜெயலலிதா பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புரட்சித் தலைவர் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் கட்சியின் கொடியில் ஜெயலலிதா படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.