யாரும் பதற்றம் அடைய வேண்டாம்: கேஸ் சிலிண்டர் சப்ளையை சீராக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை: * மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி !
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் காரணமாக இந்தியாவுக்கு வரவேண்டிய கச்சா எண்ணெய் சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து திருச்சூரில் மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் சுரேஷ்கோபி கூறுகையில், ”எல்பிஜி தட்டுப்பாடு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதில் அளித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினையால் இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொடர்பாக பல்வேறு நாட்டுத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். இதன்மூலம் நமது நாட்டுக்கு கூடுதலாக எல்பிஜி வருவதற்கான வழிகள் திறக்கப்பட்டுள்ளன. எல்பிஜி நெருக்கடியை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. நமது நாட்டில் எரிபொருள் கையிருப்பு, தேவையை விட கூடுதலாகவே உள்ளது. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என்று பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த விஷயம் குறித்து யாரும் பதற்றம் அடைய வேண்டாம். நம்மிடம் பெட்ரோல், டீசல், கெரசின், எல்பிஜி போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. சப்ளையை சீராக்க 28% உற்பத்தியை அதிகரித்துள்ளோம். மருத்துவமனைகள், மின்சார சுடுகாடு போன்ற அவசரத் தேவைகளுக்கு தற்போது எல்பிஜி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.