Rock Fort Times
Online News

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்: திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசியது என்ன?- செல்வப்பெருந்தகை …!

கடந்த சட்டமன்றத் தேர்தல், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் பயணிக்கிறது. ஆனால், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து செயல்படுவோருக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார். இது, காங்கிரஸ் கட்சியினரை சிந்திக்க வைத்தது. இந்த முறை தங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என திமுகவிடம் கேட்டது. ஆனால், ஆட்சியில் பங்கு தர இயலாது என திமுக திட்டவட்டமாக அறிவித்தது. இதனால், தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் காங்கிரஸ் இன்று( பிப்.28) பேச்சுவார்த்தை நடத்தியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்களுக்கு தேவையான தொகுதிகளை கேட்டுள்ளோம். அவர்களும் பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு தருவதாக ஏற்கெனவே முதல்-அமைச்சர் உறுதியளித்திருக்கிறார். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக, நம்பிக்கையோடு சென்று கொண்டிருக்கிறது. எந்த பிரச்சினையும் இல்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணி கொள்கைக்கூட்டணி, நம்பிக்கையான கூட்டணி. இது உறுதியான கூட்டணி, தமிழகத்தை, தமிழக மக்களை பாதுகாக்கும் கூட்டணி. மதவாதிகளை, மத நல்லிணக்கத்தை விரும்பாதவர்களை விரட்டுகிற கூட்டணி. ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற சக்திகளை தமிழகத்தில் விடமாட்டோம். வேறு கட்சியுடன் பேச்சு என்று கிரிஷ் சோடங்கர் கூறவில்லை. நாங்கள் திமுகவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்