திருச்சி மாநகராட்சியின் 2026-2027-ம் ஆண்டிற்கான வரவு- செலவு திட்ட அறிக்கையை(பட்ஜெட்) மாமன்ற கூட்டரங்கில் இன்று (26.02.2026) மேயர் மு. அன்பழகனிடம், நிதிக்குழு தலைவர் தி.முத்து செல்வம் தாக்கல் செய்தார். அப்போது துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் லி.மதுபாலன் மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் , மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* திருச்சியில் உள்ள முக்கியமான சாலைகளில் புராதன (Heritage Lamps) தெருவிளக்குகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இடவசதிக்கேற்ப சாலையோரப் பூங்காக்கள் கோட்டம் ஒன்றிற்கு தலா ரூ.1கோடி மதிப்பீட்டில், 5 கோட்ட அலுவலகங்களுக்கும் ரூ.5 கோடி செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தூய்மைப் பணியாளர்களை கொண்டு சாலையோரங்களில் குவியும் தூசுகள் உடனடியாக அகற்றப்பட்டு, நகரினை தூசியில்லா நகரமாகவும், ஆரோக்கியத்துடன் வாழவல்ல நகரமாகவும் மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள்வீட்டு கழிவு நீரை உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலப்பதை தடுத்து மாநகராட்சி புதைவடிகால் குழாய்களில் விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படும்.
* விடுபட்ட அனைத்து தெருக்களுக்கும் தெருப்பெயர் பலகைகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து சாலைகளிலும் உள்ள சாலை மையத் தடுப்பு சுவர்கள், வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படும் மற்றும் சாலை சந்திப்புகளில் ஒளிரும் சாலை ஸ்டட்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளில் வெளிச்சம் குறைவாக உள்ள 20 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக 4 ஆயிரம் 40 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளாக மாற்றுவதற்கு ரூ.2 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
* மக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து வழங்குவதற்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
* தெப்பக்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிக்கு 50 லட்சம், அலங்கார வளைவுகள் கூடிய தெரு மின் விளக்கு அமைக்க 38 லட்சம், தெப்பக்குளத்தை சுற்றி நடைமேடையுடன் கூடிய சிறுவர் சிறுமியர் பொழுதுபோக்கு பசுமைபூங்காக்கள் அமைக்க 68 லட்சம் ஒதுக்கீடு செய்வது.
* ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் உரிய அலுவலக தளவாடங்கள் வழங்கப்படும் உட்பட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருந்தன.

Comments are closed.