திருச்சியில் உள்ள அன்னை ஆசிரமம் முன்னாள் விடுதி மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி… நாளை(பிப்.22) நடக்கிறது!
திருச்சியில் உள்ள அன்னை ஆசிரமம் முன்னாள் விடுதி மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (22-02-2026) நடக்கிறது. திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ளது, அன்னை ஆசிரமம். இங்கு ஏழை எளிய பெண் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். 1954ம் ஆண்டு வானொலி நிலைய கலைஞர் வீரம்மாள் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆசிரமம் பின்னர் காமாட்சி, சத்தியபாமா ஆகியோரால் திறம்பட நிர்வகிக்கப்பட்டது. தற்போது முனைவர்.எஸ்.கல்யாணி, டாக்டர் கோமதி ராஜேந்திரன் மற்றும் 11 பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு பெண் குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி தொழிற்பயிற்சியும் அளிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இங்கு கல்வி பயின்ற பல பெண்கள் தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று திறம்பட பணியாற்றி வருகின்றனர். பலர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கண்டறிந்து ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி ஆசிரம நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் முதல் முறையாக 22- 02-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் அன்னை ஆசிரமத்தில் ஒன்றாக சந்திக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆசிரமத்தின் நிறுவனர் மறைந்த வீரம்மாள் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு புகழஞ்சலி செலுத்துகின்றனர். மேலும், ஆசிரமத்தில் உள்ள முதியவர்களுக்கு பாத பூஜை செய்து கலந்துரையாடுகின்றனர். ஆசிரம பணியாளர்கள் 30 பேருக்கு பரிசு பொருட்களை வழங்குகின்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர் இந்த நிகழ்ச்சி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் முன்நின்று செய்து வருகின்றனர்.

Comments are closed.