Rock Fort Times
Online News

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி…!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று(பிப்.15) நடைபெற்றது. கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 4 பந்துகளை எதிர்கொண்ட நிலையிலும் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுபக்கம் இஷான் கிஷன் பவுண்டரிகளை விளாசி தள்ளினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் 27 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இஷான் கிஷன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 77 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இதில் இருவரும் இணைந்து 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், திலக் வர்மா 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபே வும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ஷிவம் துபே 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த ரிங்குசிங் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 11 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்