சிறந்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிப்பு…!
தமிழ்நாடு அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள் தற்போது வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் வழங்கும் விழா இன்று(13-02-2026) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். 2009 முதல் 2012 வரையிலான திரைப்பட விருதுகள் 183 பேருக்கும், 2009 முதல் 2013 வரையிலான சின்னத்திரை விருதுகள் 101 பேருக்கும், 2008-09 முதல் 2013-14 வரையிலான விருதுகள் 30 பேருக்கும் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2015 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் 34 பேருக்கும், 2014-15 ஆம் ஆண்டுக்கான விருதுகள் 5 பேருக்கும் மார்ச் 6, 2024 அன்று அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் வழங்கப்பட்டன. தற்போது, 2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகளும், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகளும், 2015-16 முதல் 2021-22 வரையிலான விருதுகளும் சமீபத்தில் வெளியானது. திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோரும், சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சின்னத்திரை விருதுகளில் சிறந்த கதாநாயகர்களாக எம். ராஜ்குமார், ஆர். பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக் ராஜ், சஞ்சீவ் ஆகியோரும், சிறந்த கதாநாயகிகளாக ஆர்.ராதிகா சரத்குமார், வாணிபோஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்திரா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அழகி, ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரம், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்கு ரூ.1.25 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம், ஆண்டின் சிறந்த சாதனையாளர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.